உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிமென்ட் சாலையில் மழைநீர் தேக்கத்தால் சிக்கல்

சிமென்ட் சாலையில் மழைநீர் தேக்கத்தால் சிக்கல்

குன்னுார்: குன்னுார் லேம்ஸ்ராக் சாலையில், பதிக்கப்பட்ட 'இன்டர்லாக் கற்கள்' அகற்றி சிமென்ட் சாலை அமைத்த நிலையில், வாகனங்களை இயக்க டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். குன்னுார் நகராட்சி சார்பில், லேம்ஸ்ராக் செல்லும் சி.எம்.எஸ்., சாலை, ஆப்பிள்--பீ சர்ச் சாலை, குமரன் நகர் சாலை சீரமைக்க, 1.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், நகராட்சிக்கு உட்பட்ட லேம்ஸ்ராக் செல்லும் சி.எம்.எஸ்., சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த, 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. ஏற்கனவே மழைநீர் பாதிப்பு ஏற்படும் இடங்களில், சாலை பாதிக்காமல் இருக்க இன்டர்லாக் கற்களை சில இடங்களில் அகற்றி, பெயரளவிற்கு 'சிமென்ட்' சாலை அமைக்கப்பட்டது. சாலை பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் அளவிற்கு மேடு பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால் டிரைவர்கள் வாகனங்களை சிரமத்துடன் இயக்கி வருகின்றனர். பணி முடிந்து, 2 மாதங்கள் கூட நிறைவு பெறுவதற்குள், சாலை மோசமான நிலையில் காட்சியளிப்பதால், டிரைவர்கள் மற்றும் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர் வேலுசாமி கூறுகையில்,'' சி.எம்.எஸ்., பகுதியில் பழைய சாலையும் உள்ளது. புதிதாக செப்பனிடப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !