உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ராமகிருஷ்ணா மடத்தின் நூற்றாண்டு விழா கோலாகலம்

 ராமகிருஷ்ணா மடத்தின் நூற்றாண்டு விழா கோலாகலம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திகழும், ஊட்டி ராமகிருஷ்ணா மடத்தில் நுாற்றாண்டு விழா நடந்து வருகிறது. ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி சிவானந்தர், கடந்த, 1924ல் ஊட்டியில் உள்ளூர் பக்தர் திருவேங்கடம் பிள்ளை என்பவர் வழங்கிய நிலத்தில், ராமகிருஷ்ணா மடத்தை உருவாக்கினார். 1926 செப். 24ல் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. 1934 பிப்., 4ல் காந்தியடிகள் இந்த மடத்திற்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, 1940 வரை இங்கு தலைவராக இருந்த சித்பவானந்தர், நீலகிரி கிராமங்களில் ஆன்மிக பணியாற்றியதுடன், புகழ்பெற்ற தினசரி பிரார்த்தனை என்ற நுாலை இயற்றினார். சுவாமி விவேகானந்தரின் உரைகளை தொகுத்த சுருக்கெழுத்தாளர் ஜே.ஜே. குட்வின் ஊட்டியில் மறைந்தார். அவரது நினைவிடம் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில், ஆண்டுதோறும் ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ராமகிருஷ்ணா மடத்தின் நுாற்றாண்டு விழா, 25ம் தேதி துவங்கியது. விழாவில் காலை, 5:30 மணிக்கு மங்கள ஆரத்தி, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மடத்தின் உலகளாவிய தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தாஜி மகராஜ் நேற்று வருகை தந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ராமகிருஷ்ணா மிஷனின் செயலாளர் சுவாமி சாந்தாத்மானந்தாஜி , சுவாமி முக்திதானந்தாஜி உட்பட பலர் பங்கேற்றனர். இன்று நடக்கும் நிகழ்ச்சியில், மடத்தின் உலகளாவிய தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தாஜி மகராஜ் உட்பட பலர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர். ஏற்பாடுகளை, ஊட்டி ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ராகவேஷானந்தா தலைமையில் சுவாமிஜிக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !