ஒரே இடத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு... விரைவில் இடமாற்றம்!
ஊட்டி: கிராம ஊராட்சிகள் தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வந்ததை அடுத்து அங்கு, 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்களை இட மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களின் கீழ், 35 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மேற்பார்வையில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் நிர்வாக பணிகளை கவனித்து வந்தனர். ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி செயலர்கள் பணிபுரிந்து உள்ளாட்சி அமைப்பினருடன் நிர்வாகம்; வளர்ச்சி பணிகளை கவனித்து வந்தனர். முடிவுக்கு வந்தது பதவி காலம்
நீலகிரியில், '6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,' என, மொத்தம், 493 உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த, 2019ம் ஆண்டு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும், 2020ம் ஜன, 6ம் தேதி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களின் ஐந்து ஆண்டு பதவிக்காலம், 2025ம் ஆண்டு ஜன., 5ம் தேதியுடன் முடிந்தது. சிறப்பு அலுவலர்கள் நியமனம்
இதையடுத்து, சிறப்பு தனி அலுவலர்களை நியமிக்க அரசு முடிவு செய்து உத்தரவிட்டது. அதன்படி, நீலகிரி மாவட்ட ஊராட்சி அமைப்பிற்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 4 ஒன்றியங்களில் உள்ள, 35 கிராம ஊராட்சிகளுக்கு அந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ( கிராம ஊராட்சிகள்) சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் இடமாற்றம்
நீலகிரியை பொறுத்த வரை, 4 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ், 35 கிராம ஊராட்சிகள் செயல்படுகிறது. இங்கு, 35 ஊராட்சி செயலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்து தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்களை கலந்தாய்வு மூலம் விரையில் இட மாறுதல் செய்ய மாவட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில், ஒரு ஊராட்சி செயலர்கள் பணி புரிந்து வருவர். தற்போது கிராம ஊராட்சி தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த ஊராட்சிகளில் தொடர்ந்து, 5 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள்; கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவர்கள்; முறைகேடு உள்ளிட்ட தொடர் புகாரில் சிக்கியவர்களை விரைவில், கலந்தாய்வு மூலம் இட மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.