பிரபல வயலின் கலைஞர் ரூபா ரேவதி இசை நிகழ்ச்சி
பாலக்காடு : மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு, மறைந்த பிரபல வாயிலின் கலைஞர் பாலாபாஸ்கர் ஊக்கப்படுத்தினார், என, பிரபல வயலின் கலைஞர் ரூபா ரேவதி தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், ஸ்வரலயா கலை அமைப்பு சார்பில், கடந்த, 21ம் தேதி துவங்கிய நடன சங்கீத உற்சவம் இன்று வரை நடக்கிறது. நேற்று நடந்த வயலின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, பிரபல வயலின் இசைக்கலைஞர் ரூபா ரேவதி நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக சங்கீதக் கச்சேரியில் பக்கவாத்தியம் வாசிக்க துவங்கிய எனக்கு, வயலின் வாசிக்க கூடத் தெரியாமல் இருந்தது. இதைக்கற்று தந்ததும், தனித்து மேடையில் வயலின் வாசிப்பதற்கான திறமையை தந்ததும் மறைந்த பிரபல வயலின் கலைஞர் பாலாபாஸ்கர் ஆவார்.இணைவு இசை வாயிலாக, வயலின் தனித்து வாசிக்கும் போது, படைப்புத் திறனையும் வெளிப்படுத்த முடியும். குறிப்பிட்ட ராகங்களில் அமைந்த பாடல்கள், புதிய முறையில் மிகவும் விரும்பப்படுகிறது. மற்ற இசை கருவிகளுடன் சேர்ந்து உள்ள போட்டித்திறன் கொண்ட இசை நிகழ்ச்சிகளுக்காகவும் மேடையை பயன்படுத்தி உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிக்கும் இவர் திரைப்பட பின்னணி இசை அமைப்பதிலும், பாடுவதிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.