உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அதிகரிக்கும் வெள்ள பெருக்கு; ஆற்றுக்கு செல்ல வேண்டாம்

அதிகரிக்கும் வெள்ள பெருக்கு; ஆற்றுக்கு செல்ல வேண்டாம்

தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதை அடுத்து, கடந்த மூன்று நாட்களாக நீலகிரியில் கன மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து, வீடுகள் சேதமானது. தேசிய, மாநில பேரிடர் தடுப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு விடிய, விடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. சாண்டிநள்ளா திருவள்ளுவர் நகரில் வீடு மீது மரம் விழுந்தது. அப்பகுதி மக்கள் மரத்தை அகற்றினர். மழைக்கு வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்தது. மின்வாரியஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி காமராஜர் சாகர் அணை நிரம்பியது.

தாவரவியல் பூங்கா திறந்து மூடல்

கன மழை பெய்ததால், மாவட்ட முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் கடந்த, 25ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டது. நேற்று மதியம் திடீரென, 12:00 மணிக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. 'மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி திறக்கப்பட்டது,' என, பூங்கா அதிகாரி பீபிதா தெரிவித்தார். இந்நிலையில், மாலை, 4:30 திடீரென மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் பலர் நுழைவு வாயில் பகுதியில் வாக்குவாதம் செய்தனர். நுழைவு சீட்டு வாங்கி சென்ற பலர், 'பூங்காவை விட்டு உடனடியாக வெளியே வர முடியாது,' என பிரச்னை செய்தனர். அவர்களை பூங்கா ஊழியர்கள் சமாதானம் செய்து அனுப்பினர். 'அரசு அதிகாரிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை,' என்பதுஇதனால் தெளிவானது.

கூடலுார்

கூடலுாரில் உற்பத்தியாகி கேரளா நோக்கி செல்லும் பாண்டியார்-புன்னம்புழா ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதேபோன்று நீலகிரியில் உற்பத்தியாகி முதுமலை புலிகள் காப்பகம் வழியாக,பவானி ஆற்றில் இணையும் மாயாறு ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மசினகுடி - ஊட்டி சாலையில், கல்லட்டி வன சோதனை சாவடி அருகே, நேற்று முன்தினம், மாலை இரண்டு இடங்களில், ராட்சத பாறைகள் விழுந்து சாலை சேதமடைந்தது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாகன போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்தனர்.தொடர்ந்து, கோட்ட பொறியாளர் குழந்தைசாமி உத்தரவுப்படி, உதவி பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில், சேதமடைந்த சாலை, நேற்று தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'மாயாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வனவிலங்குகள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும் மழையில் ஆற்றின் வெள்ள பெருக்கு அதிகரித்து வருவதால், ஆற்றுக்கு செல்பவர்கள் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மாயாறு ஆற்று பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

பந்தலுார்

பந்தலுார் சேரம்பாடியில், 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேரம்பாடி பஜாரை ஒட்டிய சந்தனமாக்குன்னு கிராமத்திற்கு செல்லும் சாலை தாழ்வானபகுதியில் அமைந்துள்ளது. மழை வெள்ளம் செல்ல வழி இல்லாத நிலையில், ஒவ்வொரு மழை காலத்திலும் சாலை மற்றும் அதனை ஒட்டிய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படும். நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், கிராமத்திற்கு செல்லும் சாலையை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.தகவல் அறிந்த சேரங்கோடு ஊராட்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், நேரில் ஆய்வு செய்து உடனடியாக நேற்று பொக்லைன் வரவழைத்து தண்ணீர் வழிந்து ஓட ஏதுவாக கால்வாயினை அகலப்படுத்தி துார்வார நடவடிக்கை மேற்கொண்டார்.

புலிகள் காப்பகம் மூடல்

கன மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கூடலுாரில் ஊசிமலை சூழல் சுற்றுலா காட்சி முனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவரம் மையத்தில், ஜிப் லைன் சாகச சுற்றுலா மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் நேற்று, சுற்றுலா பயணிகள் வாகன சவாரி ரத்து செய்யப்பட்டதுடன், தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் அனுமதியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில்,' மழையின் தாக்கம் குறைந்தால் சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி துவக்கப்படும்,' என்றனர். -நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி