உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பருவ மழை எதிரொலியால் மண் சரிவு அபாயத்தை தடுக்க... பாதுகாப்பு நடவடிக்கை!

பருவ மழை எதிரொலியால் மண் சரிவு அபாயத்தை தடுக்க... பாதுகாப்பு நடவடிக்கை!

ஊட்டி: நீலகிரியில் தென் மேற்கு பருவ மழை எதிரொலியாக அணை, மின் நிலையங்களில் மண் சரிவு அபாயத்தை தடுக்க மின் வாரியம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நீலகிரியில் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலைங்கள் உள்ளன. இங்குள்ள, 13 அணைகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. 32 பிரிவுகளின் கீழ், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. மின் நிலையம், அணைகள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே உள்ளது. தென் மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கிய நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. கன மழை சமயத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதால், அணை, மின் நிலையங்களில் மண் சரிவு அபாயத்தை தடுக்க மின்வாரியம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிறப்பு கவனம் தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா, காட்டு குப்பை, போர்த்தி மந்து, சாண்டிநல்லா, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட இடங்களில் தென் மேற்கு பருவ மழை பலத்த காற்றுடன் பெய்து வருகிறது. மின் உற்பத்திக்கு மேற்கண்ட பகுதிகள் முக்கிய பங்காக இருப்பதால் மின் வாரியம் அதிகாரிகள் பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ' நீலகிரியில் மலைச்சரிவுகளுக்கு இடையே பெரும்பாலான அணை, மின் நிலையங்கள் உள்ளன. மண் சரிவு அபாயத்தை தடுக்க மழை நீர் பாதை சீரமைப்பு, ராட்சத குழாய்களில் சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றுதல், மின் நிலையத்தை ஒட்டி தேவைப்படும் இடங்களில் தடுப்பு சுவர் கட்டுதல், மின் கோபுரங்களின் நிலை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.' என்றார். நீர் மட்டம் உயர்வு! இரண்டு நாட்கள் நிலவரப்படி, அவலாஞ்சி, 27 செ.மீ., அப்பர்பவானி, 12.9 செ.மீ., பார்சன்ஸ்வேலி, 9 செ.மீ., என, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அணைகளில், 3 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ