வட்டார வள பயிற்றுனர்கள் தேர்வு; தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊட்டி : 'வட்டார வள பயிற்றுனர்கள் தேர்வு செய்திட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: நீலகிரியில், 4 வட்டாரங்களில் நிறுவன மேம்பாடு, திறன் வளர்ப்பு மற்றும் கூடுகை கூட்டாண்மை பிரிவின் கீழ், வட்டார வள பயிற்றுனர்கள் தேர்வு செய்திட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் பெண்ணாகவும் (சுய உதவிக்குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்) 2023ம் ஆண்டு ஜூலை, 31ம் தேதியில் 25 வயது முதல் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஏதேனும் இளங்கலை பட்டம், சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்புகளுடன், 3 முதல் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம், தமிழ் மற்றும் ஆங்கிலம் (எழுதுதல் படித்தல்) வலுவான தகவல் தொடர்பு திறன் கொண்டவராக இருக்க வேண்டும். நல்ல தனிப்பட்ட திறன்களுடன், கம்ப்யூட்டர் அடிப்படை தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பங்களை திட்ட இயக்குனர் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு இம்மாதம் இறுதிக்குள் அனுப்ப வேண்டும். நேரிலும் அளிக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.