குறுவட்ட விளையாட்டு போட்டிகள்: தும்மனட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
கோத்தகிரி: ஊட்டி குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில், தும்மனட்டி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வளையபந்து போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மாணவ, மாணவியர் வெற்றி பெற்று, மாவட்ட போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதேபோல, மேசை பந்து போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் ஒற்றையர் பிரிவிலும், 14 வயதுக்கு உட்பட்டோர் மாணவிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், முதலிடம் பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கேரம் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் ஒற்றையர் பிரிவிலும், 17 வயதிற்கு உட்பட்டோர் மாணவர்கள் ஒற்றை யர் மற்றும் இரட்டையர் பிரிவிலும், 14 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். இதேபோல தடகள போட்டி மும்முறை தாண்டுதலில் இரண்டாம் இடமும், சதுரங்க போட்டியில் மாணவர்கள் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்றுள்ள னர். பள்ளி மாணவி சித்ரா, தேசிய வளையப் பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பள்ளியில் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை யில் பாராட்டு விழா நடந்தது. அதில், பள்ளி பி.டி.ஏ., தலைவர் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா, தும்மனட்டி கிராம தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் மூர்த்தி, நாக்குபெட்டா நல சங்க முன்னாள் தலைவர் பாபு ஆகியோர், சாதித்த மாணவ மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். பி.டி.ஏ., நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.