உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குந்தா ஒசஹட்டி கூட்டு குடிநீர் திட்ட பணியில் மந்த கதி!: தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னையால் மக்கள் தவிப்பு

குந்தா ஒசஹட்டி கூட்டு குடிநீர் திட்ட பணியில் மந்த கதி!: தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னையால் மக்கள் தவிப்பு

மஞ்சூர்: 'மஞ்சூரில், 10 கோடி ரூபாய் நிதியில் நடந்து வரும் ஒசஹட்டி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவு படுத்த வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கீழ்குந்தா பேரூராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக அம்மக்கல், ஊசிமலை, கட்லாடா, அப்புனாய் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள தொட்டிகளில் சேகரிக்கப்பட்ட பின், வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் ஆதாரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே உள்ளன. இப்பகுதிகள் போதிய பராமரிப்பு இல்லாததால், நீர் வரத்து குறைந்தது. பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. குறிப்பாக, கோடை மற்றும் வறட்சி காலங்களில் கடுமையான குடிநீர் பிரச்னை காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். 'குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தினர். ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு இதை தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது. தொடர்ந்து, குந்தா ஒசஹட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் துவக்கப்பட்டன. கூட்டு குடிநீர் திட்ட அமைய உள்ள இடத்திலிருந்து முக்கிய இடங்களில் நீர் தேக்க தொட்டி அமைப்பு பணியும் நடந்து வருகிறது. 65 சதவீத பணிகள் முழுமை அடைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மந்த கதியில் பணிகள் நடந்து வருகிறது. இதனால், பல இடங்களில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியாத சூழல் உள்ளது. பொதுமக்கள் கூறுகையில்,'மஞ்சூர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. திட்ட அறிக்கை படி, இப்பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை