தொடரும் பாக்கு விலை உயர்வு; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
கூடலுார்; கூடலுாரில் பாக்கு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கூடலுார், விவசாயிகள் தேயிலை, காபி, ஏலக்காய் ஆகியவற்றுடன், தோட்டங்களில் ஊடுபயிராக, குறுமிளகு, பாக்கு நடவுசெய்து, கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும், குறுமிளகு, பாக்கு ஆகியவை சமவெளி பகுதிக்கு கேரளாவுக்கும் அதிகளவில் செல்கிறது.இங்குள்ள வியாபாரிகள், கேரளா மார்க்கெட் விலை நிலவரப்படி, பாக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். நடப்பாண்டு ஜன., முதல், ஏப்., வரை பாக்கு அறுவடை நடைபெற்றது. கிலோக்கு அதிகபட்சம், 50 ரூபாய் வரை விலை கிடைத்தது. கடந்த மாதம் கிலோவுக்கு, 70 ரூபாய் விலை கிடைத்த நிலையில், தொடர்ந்து விலை உயர்வு ஏற்பட்டது. தற்போது விவசாயிகளிடமிருந்து கிலோ, 150 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்து வருகின்றனர். அறுவடை செய்து இருப்பு வைத்திருந்த விவசாயிகள் நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.விவசாயி ஆனந்தசைனம் கூறுகையில், ''கூடலுாரில் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக குறுமிளக்கு அடுத்து, பாக்கு மரங்கள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். சீசன் இல்லாத காலங்களில், கிலோவுக்கு அதிகபட்சம், 100 வரை விலை கிடைத்தது. நடப்பு ஆண்டு, சீசன் இல்லாத நிலையில், தற்போது இதன் விலை உச்சத்தை தொட்டு, 150 ரூபாய்க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்து வருவது பெரும் பயனாக உள்ளது. விலை மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.