உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்ட வேலிகளில் தொங்க விடப்பட்ட பாட்டில்கள்; யானைகளை விரட்ட சிறு விவசாயிகள் மாற்று முயற்சி

தோட்ட வேலிகளில் தொங்க விடப்பட்ட பாட்டில்கள்; யானைகளை விரட்ட சிறு விவசாயிகள் மாற்று முயற்சி

கூடலுார்; கூடலுார் பகுதியில் தோட்ட வேலியில் காலி பாட்டில்களை தொங்கவிட்டு, அதன் உராய்வில் எழும் ஓசையால், காட்டு யானை வருவதை தடுக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள், உணவு; குடிநீர் தேடி இரவில் குடியிருப்பு பகுதி,தோட்டங்களுக்குள் நுழைவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இவ்வாறு வரும் யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி வருகின்றன. இதனை தடுக்க, குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் அகழி அமைத்துள்ளனர். பல விவசாயிகள் தோட்டங்களை சுற்றி சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இதனை தவிர, வன ஊழியர்கள் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சோலார் மின்வேலி அமைக்க வசதி இல்லாத சிறு விவசாயிகள், தோட்டங்களை சுற்றியுள்ள வேலியில் கம்பி கட்டி, அதில் காலி மது பாட்டில்களை தொங்க விட்டுள்ளனர். காட்டு யானைகள் தோட்டங்களுக்கு வந்து, வேலியை கடக்கும் முயற்சிக்கும் போது, மது பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று உராயும் ஓசையை கேட்டு ஓடிவிடுகின்றன. இதனால், அவற்றுக்கு 'ஷாக்' அபாயம் இல்லை. விவசாயிகள் கூறுகையில்,'காட்டு யானைகள் விவசாய தோட்டத்தில் நுழைவதை தடுக்க போராடி வருகிறோம். இந்நிலையில், தோட்டத்தை சுற்றி உள்ள சோலார் மின் வேலி அமைக்க வசதி இல்லை. இதனால், வேலியில், கம்பி கட்டி அதில் காலி பாட்டில்களை தொங்க விட்டுள்ளோம். இதன் ஓசையில் யானைகள் ஓடி விடுகின்றன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ