பழங்குடியினர் கிராமங்களில் ஒரு வாரம் சிறப்பு முகாம் சமூக பணித்துறை மாணவர்கள் பங்கேற்பு
கோத்தகிரி, ; கோத்தகிரி பழங்குடியினர் கிராமங்களில், என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சமூக பணித்துறை மாணவர்கள் மற்றும் நீலகிரி ஆதிவாசி நலசங்கம் சார்பில் ஒரு வார சிறப்பு முகாம் நடந்தது.நாவா செயலாளர் ஆல்வாஸ் தலைமை வகித்தார். அதில், பழங்குடியினர் எதிர்நோக்கும் சவால்கள்; காச நோய்; காய்ச்சல் ஆகியவற்றின் தாக்கம் குறித்து, 'நாவா' மருத்துவமனையில் மாணவர்கள் கேட்டறிந்தனர். மேலும், குடும்ப வன்முறை மற்றும் மதுவின் தீமைகள் குறித்து நாடகம் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும், கோத்தர், தோடர் மற்றும் இருளர் கிராமங்களுக்கு சென்று, பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் குறித்து, மாணவர்கள் தெரிந்து கொண்டனர். பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினர். நிறைவாக, மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லிவன் நினைவகத்துக்கு சென்ற மாணவர்கள், அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் பழங்குடியின சமூகங்களில் வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் மற்றும் கைவினை பொருட்களை கண்டு வியந்தனர்.இதில், முதுநிலை ஒருங்கிணைப்பாளர் மனோகரன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, திட்ட மேலாளர் திருமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் புஷ்பக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.