சீரழியும் இளைய சமுதாயம்! கைகட்டி வேடிக்கை பார்க்கும் அரசு நிர்வாகங்கள்: தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருவங்காடு பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் புகழேஷ், 14. குன்னூர் அந்தோணியார் பள்ளியில் படித்து வந்த, சக மாணவர்களுடனான மோதலில், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த நீலகிரியையும் உலுக்கியுள்ளது. ஒரு பிஞ்சு உயிர் அநியாயமாக பறிபோன இந்த துயர சம்பவம், வெறும் ஒரு தனிப்பட்ட மோதலாக பார்க்காமல், தற்போதைய பள்ளி மாணவர்களிடையே, மலிந்து கிடக்கும் எண்ணற்ற சீர்கேடுகளையும், பள்ளிகள் மற்றும் அரசு இயந்திரங்களில் உச்சகட்ட அலட்சியத்தையும் தோலுரித்து காட்டும் அபாய எச்சரிக்கையாக உள்ளது. ஸ்மார்ட் போன் ரீல்ஸ் மோகம் கல்விக்காக கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள் இன்று வன்முறையை தூண்டும் சவால்களாக மாறியுள்ளன. சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களை பார்த்து நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயிசம் காட்ட நினைக்கும் செயல்கள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் பல இடங்கள் மறைமுகமாக கஞ்சா விற்பது அதிகரித்துக் கொண்டே உள்ளது. சமூகவிரோதிகளால் கைமாறும் கஞ்சாவை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. என, பொதுநல அமைப்பினர் குற்றச்சாட்டுகின்றனர். அத்துமீரும் பைக் ரேஸ்: ஓட்டுநர் உரிமம் பெறும் வயதிற்கு முன்பு, பெற்றோர் வாங்கி கொடுக்கும் விலை உயர்ந்த பைக்குகளை வைத்து, அசுர வேகத்தில் ரேஸ் போவதும், ஒரே பைக்கில் 3 பேர் ஆபத்தான முறையில் பயணிப்பதும் தொடர்கிறது. மெயின் சாலைகளில் நின்று அபராதம் விதிப்பதில் குறியாக இருக்கும் போலீசார், பள்ளி சுற்றுப்புற பகுதிகளில் நடக்கும் அத்துமீறல்களை கண்டு கொள்வதில்லை. மாணவர்கள் தான் வன்முறை மற்றும் போதையில் சிக்குகிறார்கள் என்றால் மாணவிகளும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் குன்னூர் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பிரிவு உபசார விழா நடத்தியதில், சில மாணவிகள், பீர் குடித்து போதையில் விழுந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற விவகாரங்களை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளி நிர்வாகம், அக்கறையின்றி மவுனம் சாதித்துள்ளது. இந்த மெத்தன போக்கு தவறு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு எந்த பயமும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றங்களை தடுக்கவும் பிங்க் பேட்ரோல் வாகனங்கள், குன்னூர் உட்பட நகர பகுதிகளில், சேவை முற்றிலும் செயலிழந்துள்ளது.
கவுன்சில் தேவை!
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில், அரசு உதவி பெறும் சில பள்ளிகள் குறிப்பிட்ட மாணவர் சேர்க்கையை விட கூடுதலாக சேர்ப்பதால் கல்வி தரம் குறைதல், ஒழுக்கமின்மை, சீர்கேடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. ஸ்மார்ட் போனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் முதல் கடமை. பலரும் மொபைல்களை மறைத்து பள்ளிக்கு எடுத்து, வெளிப்பகுதிகளிலும், பேசுவது தொடர்கிறது. மொபைல் எடுத்து வரும் மாணவர் மீது பாரபட்சம் காட்டாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதாந்திர பெற்றோர் ஆசிரியர் கூட்டம், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் தன்னார்வலர்கள், டாக்டர்களின் கவுன்சில் அவசியம். என்றார்.