சப்தம் எழுப்பி யானைகளை விரட்டும் தெர்மல் கேமரா கூடலுார் வன கோட்டத்தில் புதிய முயற்சி
பந்தலுார்,:கூடலுார் வனக்கோட்டத்தில், குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டுள்ள காட்டு யானைகளை, அதிநவீன கேமரா உள்ள ட்ரோனில் கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் இரவு முழுதும் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இப்பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடகா வனப்பகுதிகளின் எல்லைகளாகவும் உள்ளன. கூடலுார் வனக்கோட்டத்தில் மட்டும், 154 யானைகள் இருப்பது சமீபத்திய கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 15 யானைகள் கிராமப்புறங்களில் முகாமிட்டு, மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.இங்கு வனங்களை ஒட்டி அமைந்துள்ள பெரும்பாலான தோட்டங்களை சுற்றிலும் சோலார் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால், யானைகளின் வழித்தடங்கள் தடைப்பட்டு, அவை ஊருக்குள் வருவதும், யானை - மனித மோதல் நடப்பதும் அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட, 'கும்கி' யானைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில், சதுப்பு நிலங்கள், அடர் வனங்கள் வழியாக கும்கி யானைகளை கொண்டு செல்ல முடியாத நிலையில், காட்டு யானைகளை முழுமையாக விரட்டுவது இயலாத காரியமாக மாறியது.இந்நிலையில், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு முயற்சியால், இரவு நேரங்களிலும் வன விலங்குகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறியும் வகையிலும், பல்வேறு சப்தம் எழுப்பும் ஸ்பீக்கர் வசதி உள்ள, 'டிஜேஐ' என்ற நிறுவனத்தின், '4-டி மாடல்' தெர்மல் கேமராக்கள் வாங்கப்பட்டன. தற்போது இதை பயன்படுத்தி யானைகளை விரட்டி வருகின்றனர்.இதனால், பகல் நேரங்களில் மட்டுமின்றி, இரவிலும் குடியிருப்பு பகுதிகள், விவசாய தோட்டங்களுக்கு வரும் யானைகள், காட்டு பன்றிகள் போன்ற விலங்குகளை துல்லியமாக கண்டறிந்து அவற்றை விரட்ட முடியும்.
விலங்கு சப்தங்களை பதிவிறக்கம் செய்யலாம்
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:நவீன தெர்மல் கேமரா ட்ரோன் உதவியுடன் யானைகளை கண்காணித்து விரட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது, 22 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், சில கேமராக்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யானைகளை விரட்ட, இதில் உள்ள ஸ்பீக்கரில், 'தேனீக்களின் ரீங்காரம்; புலியின் சப்தங்கள்' எழுப்பப்படுகிறது. நமக்கு தேவைப்பட்டால், 15 பிற விலங்குகளின் சப்தங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.மேலும், வன விலங்குகளின் நடமாட்டத்தை கிராம மக்களுக்கு அறிவிக்கும் வகையில், 'வாட்ஸாப்' குழு ஏற்படுத்தப்படும். இதனால், மனித - விலங்கு மோதலை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் வனத்துறையினரின், பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.