மேலும் செய்திகள்
துரத்திய காட்டு யானை: தப்பிய சுற்றுலா பயணி
11-Aug-2025
அத்துமீறும் தருணம்; கரணம் தப்பினால் மரணம்!
31-Jul-2025
கூடலுார்: கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், காட்டு யானையிடம் சிக்கிய சுற்றுலா பயணி படுகாயடைந்தார். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையில், கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இவ்வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நேற்று முன்தினம் மாலை, பந்திப்பூர் மைசூரு சாலையோரம் முகாமிட்ட காட்டு யானையை, சுற்றுலா பயணியர் வாகனங்களை நிறுத்தி பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கீழே இறங்கி, அதை போட்டோ எடுக்க முயற்சித்து இடையூறு செய்தனர். அப்போது, சாலையில் சுற்றுலா பயணியர் அதிகளவில் கூடியதால், ஆக்ரோஷமான யானை, திடீரென சாலையை கடந்து சென்றது. அப்போது, சுற்றுலா பயணி ஒருவர் யானையை பின் தொடர்ந்து போட்டோ எடுக்க ஓடினார். ஒரு கட்டத்தில் யானை அவரை துரத்தியது. யானையிடமிருந்து தப்பிக்க வேண்டி சாலையை நோக்கி ஓடினார். அதற்குள் யானை அவரை துரத்தி சென்று, சாலையில் கீழே தள்ளி தாக்கியது. சக சுற்றுலா பயணியர் சப்தமிட்டதால் யானை வனப்பகுதிக்குள் ஓடியது. யானை தாக்கியதில் படுகாயமடைந்த அவரை, சுற்றுலா பயணியர் மீட்டு சிகிச்சைக்காக குண்டல்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் வன ஊழியர்கள் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை, பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதி சாலைகளில் யானை, புலிகள் நடமாட்டம் உள்ளது. இந்த சாலையில் செல்லும் பயணியர் விலங்குகளை பார்த்து வாகனங்களை நிறுத்தக் கூடாது. அதிலும், 'செல்பி' எடுக்கும் ஆர்வத்தில் சாலையில் இறங்கும் போது, விலங்குகள் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. சுற்றுலா பயணியர் எக்காரணத்தை கொண்டும் வனப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது' என்றனர்.
11-Aug-2025
31-Jul-2025