காட்டெருமைகள் தாக்கி இருவர் காயம்
குன்னுார்; குன்னுாரில் இரு வேறு இடங்களில் காட்டெருமைகள் தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், உலிக்கல் ட்ரூக் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளி தேவதாஸ், 63, என்பவர் நேற்று காலை வெளியே சென்ற போது, காட்டெருமை தாக்கியுள்ளது. இதில் கால் பகுதியில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இதே போல, கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட, வெலிங்டன் பாபு வில்லேஜ் பகுதியை சேர்ந்த விக்கி, 27, என்பவரை காட்டெருமை தாக்கியதில் லேசான காயமடைந்துள்ளார். இவரும் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடிபோதையில் இருந்த இவர் மாடுகளை தேடி சென்ற போது, காட்டெருமை அருகில் சென்றதில், தாக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.