உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு கல்லுாரியில் இளங்கலை சிறப்பு கலந்தாய்வு துவக்கம்

அரசு கல்லுாரியில் இளங்கலை சிறப்பு கலந்தாய்வு துவக்கம்

ஊட்டி; ஊட்டி அரசு கலை கல்லுாரியில், 2025-26-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தற்போது, 4,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, 18 இளநிலை படிப்புகளும், 12 முதுநிலை படிப்புகளும் உள்ளன. நடப்பாண்டு பிளஸ்-டூ பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் உயர்கல்வியில் சேர கடந்த மே, 7ம் தேதி தொடங்கி, 30 ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நடந்தது.இளநிலை பாடப்பிரிவு களில் மொத்தம், 1,142 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, 23,184 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. 40 இடங்கள் உள்ள இளங்கலை பாதுகாப்பியல் பாடத்தில் சேர அதிகபட்சமாக, 1,415 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.காம் ., சி.ஏ., பாடத்தில் சேர, 1,338; பி.எஸ்.சி., கணினி அறிவியல், 1,329; பி.ஏ., சுற்றுலாவியல், 1,022; பி.எஸ்.சி., வனவிலங்கு உயிரியல், 930 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிற துறைகளுக்கான விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளது.

சிறப் பு கலந்தாய்வு

நேற்று முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கியது. 'விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவம், பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசுகள், மாற்று திறனாளிகள், அந்தமான் நிக்கோபர் மற்றும் என்.சி.சி., மாணவர்கள்,' என, சிறப்பு பிரிவில் , 726 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு ஆணையை வேதியியல் துறை பேராசிரியர் ஸ்ரீதரன் வழங்கினார். வணிகவியல் (சி.ஏ.,) வணிகவியல் (ஐ.பி.,) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு வரும், 4 தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 10ம் தேதி நடக்கிறது. அறிவியல் துறை சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு, 5ம் தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 11ம் தேதி நடக்கிறது. இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, 6ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 12ம் தேதி நடக்கிறது. மீதமுள்ள இடங்களுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு பின்னர் நடக்கிறது.

குன்னுாரில் இன்றும், நாளையும்...

குன்னுாரில் புதிதாக துவங்கிய, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர, www.tngasa.inஇணையதளம் வழியில் கடந்த மாதம், 27ம் தேதி வரை, 2,713 மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வந்துள்ளன. 3ம் தேதி (இன்று) காலை, 10:00 மணிக்கு என்.எஸ்.எஸ்., விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது. வணிகவியல், வணிக நிர்வாகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், விலங்கியல், தாவரவியல் பிரிவுகளுக்கு, 4ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க, கல்லுாரி முதல்வர் சனில் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை