திறக்கப்படாத நவீன கழிப்பிடம்; வீணடிக்கப்பட்ட நகராட்சி நிதி
குன்னுார் ; குன்னுார் நகராட்சியின் அலட்சியத்தால், 36 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன கழிப்பிடம், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் புதர் சூழ்ந்து காணப்படுகிறது.குன்னுார் காந்திபுரம் பகுதியில், கடந்த, 2022ம் ஆண்டில், 36 லட்சம் ரூபாய் செலவு செய்து புதிதாக நவீன சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும், திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் முட்புதர்கள் சூழ்ந்து மக்களுக்கு பயனின்றி நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் வீடுகளுக்கு செல்லும் நடைபாதை. தடுப்புச்சுவர் வசதிகள் செய்து தர பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளாமல், புதிகாக கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த பணி நிறைவு பெறாமல் முட்புதர்கள் சூழ்ந்து மக்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயனில்லை,'என்றனர்.எனவே, இங்கு காணப்படும் முட்புதர்களை அகற்றி நவீன கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.