அணைகளில் தண்ணீர் சரிவு; மின் உற்பத்தியில் சிக்கல்
ஊட்டி: அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவதால், மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள், 13 அணைகள் உள்ளன. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக, 833.65 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. ஜனவரி முதல், மே மாதம் வரையிலான சராசரி மழையளவு, 30 செ.மீ.,ல், இதுவரை, 8 செ.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. மின் உற்பத்திக்கு, முக்கிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்தி மந்து உட்பட, பெரும்பாலான அணைகளில், 20 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. மாவட்டத்தில், 12 மின் நிலையங்களில், 32 பிரிவுகள் உள்ளன. இங்குள்ள தண்ணீர் அளவை பொறுத்து, தினசரி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நிலையில், 10 பிரிவுகளில் மட்டும், 150 முதல், 200 மெகா வாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கோவை உட்பட பிற மாவட்டங்களுக்கு, எதிர்பார்த்த அளவு மின்சாரம் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பெரும்பாலான அணைகளில் தண்ணீர் அளவு, படிப்படியாக குறைந்து, 20 சதவீதம் அளவுக்கு இருப்பில் உள்ளது. ஓரிரு வாரம் தாக்கு பிடிக்கலாம். பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என்றனர். அணைகளில் தண்ணீர் இருப்பு நிலவரம் (அடியில்). ---- முக்குறுத்தி --- 18 --15 பைக்காரா -- 100 -- 50 சாண்டிநல்லா -- 49 -- 15 கிளன்மார்கன் - - 33 -- 10 மாயார் -- 17--14 அப்பர் பவானி --- 210 --80 பார்சன்ஸ்வேலி -- 60 --50 போர்த்தி மந்து -- 130- -30 அவலாஞ்சி - --- 171 --25 எமரால்டு- -- 184 --30 குந்தா - -- 89 -82 கெத்தை - 156-- 145 பில்லுார் - -- 100 --65