கோத்தகிரி பாரதி நகரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாடு; போராட்டம் நடத்த மக்கள் முடிவு
கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பாரதி நகரில் தண்ணீர் தட்டுப்பாடு தொடருவதால், மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, கட்டபெட்டு பாரதிநகர் கிராமத்தில், 250 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். கட்டபெட்டு 'இன்கோ ஜங்சன்' பிரதான சாலையில் இருந்து, செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு, தாழ்வான பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை பகுதி நீர் ஆதாரத்தில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த, 10 நாட்களுக்கு மேலாக, குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், பகுதி மக்கள் மாலையில் தோட்டப் பணிகளை முடித்துவிட்டு, குறிப்பாக பெண்கள் நீண்ட தூரம் செங்குத்தான நடைபாதையில், குடங்களை தலையில் சுமந்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இது குறித்து, 'பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,' என, மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, குடியிருப்புகளுக்கு சீரான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஊர் தலைவர் மதியழகன் கூறுகையில்,''கிராமத்திற்கு வினியோகிக்கப்படும் இரண்டு கிணறுகளும் சேறு நிறைந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஓரிரு நாட்களில், தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில், கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.