குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்; மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
கூடலுார்; கூடலுார் மரப்பாலம் அருகே, கோழிக்கோடு சாலையில், குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலுார், கோழிக்கோடு சாலை மரப்பாலம் அருகே உள்ள, அட்டிகொல்லி கிராமத்துக்கு கடந்த, 20 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மக்கள், நெல்லியாளம் நகராட்சிக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த, அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை, 8:30 மணிக்கு, கோழிக்கோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் சாலை இருபுறமும் நிறுத்தப்பட்டது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அரசு ஊழியர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என, பலரும் சிரமத்திற்கு ஆளாகினர். பெண்கள் கூறுகையில்,'கூடலுாரில் கடந்த, 6 மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது. ஆனால், எங்கள் கிராமத்தில் குடிநீர் கடந்த, 20 நாட்களாக கிடைப்பதில்லை,' என்றனர். தேவாலா டி.எஸ்.பி., ஜெயபால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.எஸ்.ஐ.,கள் திருக்கேஷ், பெள்ளி மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'நகராட்சி அதிகாரிகளுடன் பேசி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்று, 10:00 மணிக்கு பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, போலீசார் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.