நீர் வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் பலி; கோத்தகிரி போலீசார் விசாரணை
கோத்தகிரி; கோத்தகிரி அருகே நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் பலியானது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கூக்கல்தொரை சாலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுற்றுலா வரைபடத்தில், இந்த நீர்வீழ்ச்சி இடம்பெறாமல் இருப்பினும், சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் இயற்கை சூழ்ந்த இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதி பாதுகாப்பு இல்லாமல் உள்ளதை கருத்தில் கொண்டு, குளிப்பதற்கு தடை விதித்து, வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவ்வப்போது, சில சுற்றுலா பயணிகள் உள்ளூர் இளைஞர் அத்துமீறி நுழைந்து, நீர் வீழ்ச்சியில் நீச்சல் அடிப்பது தொடர்கிறது. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, இப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், நீர்வீழ்ச்சியில் குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக, கூக்கல்தொரை அருகே உள்ள சீகொலா கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்,31, தண்ணீரீல் மூழ்கி பலியானார். அவருடன் சென்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டும் அத்துமீறல் தொடர்கிறது. இங்கு கூடுதல் வன பணியாளர்களை பணியமர்த்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கோடை சீசன் வர உள்ள நிலையில், காலை முதல் மாலை வரை கண்காணிப்பை தொடர வேண்டும்,' என்றனர்.