உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ஆசிரியரிடம் ரூ.40,000 லஞ்சம்; இரு உதவியாளர்கள் சிக்கினர்

ஆசிரியரிடம் ரூ.40,000 லஞ்சம்; இரு உதவியாளர்கள் சிக்கினர்

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 60; பசும்பலுார் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர். இவரது பணிக்காலம் ஜூலை 31ல் முடிவடைந்தது.மேலும் ஓராண்டுக்கு பணியை நீட்டிக்கக் கோரி, பெரம்பலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் விண்ணப்பித்தார்.விண்ணப்பத்தை பரிசீலித்த உதவியாளரான திருச்சி, திருவெறும்பூரை சேர்ந்த சிவபாலன், 47, தனக்கு 40,000 ரூபாய் லஞ்சம் தந்தால், பணி நீட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார். தர விரும்பாத பாலசுப்ரமணியம், பெரம்பலுார் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.நேற்று முன்தினம் மாலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு சென்ற பாலசுப்ரமணியம், சிவபாலன் அறிவுறுத்தலில் அதே அலுவலக இளநிலை உதவியாளரான திருச்சி மாவட்டம், சிறுகனுாரை சேர்ந்த ரமேஷிடம், பணத்தை கொடுத்தார்.அப்போது, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான போலீசார், சிவபாலன், ரமேஷ் ஆகிய இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர். சிவபாலன், ரமேஷ் வீடுகளில் நேற்று சோதனை நடந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !