பிணவறை ஏசி ஓராண்டாக அவுட்! பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் மக்கள் அவதி
பெரம்பலுார்:சந்தேக மரணம், தற்கொலை, கொலை போன்ற காரணங்களால் இறப்போரின் உடல்களை, டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய, பெரம்பலுார் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிணவறை உள்ளது. ஆனால், இங்குள்ள, 'ஏசி' ஓரண்டாக பழுதடைந்துள்ளது. இதனால், இங்கு பிரேத பரிசேதனைக்காக போலீசாரால் கொண்டு வரப்படும் இறந்தவர்களின் உடல் அழுகி விடாமல் இருக்க, வாடகைக்கு, 'கூலர் பாக்ஸ்' வாங்கித்தர வலியுறுத்தப்படுகின்றனர்.இதற்காக, இறந்தவரின் குடும்பத்தினர், 2,500 ரூபாய் பணம் தர மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்துகிறது. அதுவும், குறிப்பிட்ட ஒரே நிறுவனத்திடம் மட்டுமே கூலர் பாக்ஸ் வாங்கித் தரவும் அறிவுறுத்துகின்றனர். உறுப்புகளை சேகரித்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்புவற்கான பாட்டில், பிணத்தை கட்டுவதற்கான காடா துணி, சோப் உள்ளிட்ட பொருட்கள் வாங்கித்தர வேண்டும். இதோடு, அங்குள்ள கம்பவுண்டர் உட்பட தொழிலாளர்கள் பிரேத பரிசோதனை செய்ய, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.குடும்பத்தில் ஒருவரை இழந்து, வேதனையில் செய்வதறியாது தவிக்கும், அந்த குடும்பத்தினர் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுக்க குறைந்தபட்சம், 5,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஓராண்டாக பிணவறை ஏசி பழுதாகியுள்ளது குறித்து, உயரதிகாரிகளுக்கு தெரிந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். உடனடியாக, இப்பிரச்னையில், அரசு தலையிட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனை பிணவறை 'ஏசி'யை சரி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.