எம்.ஆர்.எப்., ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நாரணமங்கலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலுார் மாவட்டம், நாரணமங்கலத்தில், எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள், இரண்டு நாட்களாக கருப்பு பேட்ஜ் அணிந்து உணவு புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக நேற்று நடந்த போராட்டத்துக்கு, வெல்பர் யூனியன் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். ஊழியர்களுக்கு, 22 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காமல், காலம் தாழ்த்தும் நடவடிக்கையை கைவிட்டு, உடனடியாக நிலுவை தொகை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெல்பர் யூனியன், சி.ஐ.டி.யு., மற்றும் தொ.மு.ச., ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த, 750 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று, தொழிலாளர்கள் ஊர்வலமாக, பெரம்பலுார் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.