உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / போலீஸ் ஏட்டு கண்முன் டிரைவர் கொலை உறவினர்கள் ஸ்டேஷனை நொறுக்கி முற்றுகை

போலீஸ் ஏட்டு கண்முன் டிரைவர் கொலை உறவினர்கள் ஸ்டேஷனை நொறுக்கி முற்றுகை

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், கை.களத்துார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 30. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன், 32. இருவரும் கை.களத்துார் கிராமத்தை சேர்ந்த அருண்குமாரிடம், நெல் அறுவடை இயந்திர டிரைவராக வேலை பார்த்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மது அருந்திவிட்டு வேலைக்கு வரும் தேவேந்திரனுக்கும், மணிகண்டனுக்கும் இரண்டு நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. மணிகண்டன் கை.களத்துார் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு மணிகண்டனையும், தேவேந்திரனையும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் அருண்குமார் வயலுக்கு நேரில் வருமாறு ஏட்டு ஸ்ரீதர் அழைத்துள்ளார்.

போராட்டம்

அங்கு வந்த மணிகண்டனை, ஏட்டு ஸ்ரீதர் முன்னிலையில், தேவேந்திரன் அரிவாளால் வெட்டினார். அப்போது, ஸ்ரீதர், ஊர்க்காவல் படை வீரர் பாபு, அங்கிருந்த மக்கள் தேவேந்திரனை மடக்கி பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மணிகண்டன் பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். தகவலறிந்து அங்கு திரண்ட மணிகண்டன் உறவினர்கள், சடலத்தை கை.களத்துார் ஸ்டேஷன் முன் சாலையில் கிடத்தி, தேவேந்திரனை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமாதான பேச்சு

அப்போது, சிலர் போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீசி தாக்கினர். இதில், ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. ஸ்டேஷனில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. போலீஸ் ஸ்டேஷன் பூட்டப்பட்டு, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.பெரம்பலுார் எஸ்.பி., ஆதர்ஷ்பசேரா விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். பின், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்தனர். மறியலால் பெரம்பலுார்- -- சின்னசேலம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேவேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ