உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: புதுகையில் பழனிசாமி சூளுரை

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: புதுகையில் பழனிசாமி சூளுரை

புதுக்கோட்டை: முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டார். கந்தர்வகோட்டையில் பழனிசாமி பேசியதாவது: ஓரணியில் தமிழகம் என்ற பெயரில் ஒரு திட்டத்தைத் தீட்டி, வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறது தி.மு.க., உலகிலேயே இப்படியொரு கட்சி வீடு வீடாக சென்றதாக வரலாறு இல்லை. வீட்டுக்கு வரும் தி.மு.க.,வினர் செல்போன் எண் கேட்டு, அதை செயலியில் பதிவிட்டு, உங்கள் தனிப்பட்ட விபரங்களை திருடுகின்றனர். அதற்கு, யாரும் இடம் கொடுக்கக் கூடாது; உஷாராக இருக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை செயல்படுத்த அரசு அதிகாரிகளை பயன்படுத்துகின்றனர். 46 பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப் போகின்றனராம். 8 மாதத்தில் எப்படி தீர்வு ஏற்படுத்துவர்? நான்கு ஆண்டுகளாக பிரசனைகளை தீர்க்காத அரசு, இனியும் தொடர வேண்டுமா? ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, ஊர் ஊராக பெட்டி ஒன்றை எடுத்துச் சென்று, அதில் மக்களிடம் மனு வாங்கிப் போட்டு பூட்டினார். அதில் ஒரு பிரச்னையைக் கூட தீர்க்கவில்லை. இப்போது, அரசு அதிகாரிகளை வைத்து மனு வாங்குகிறார். மனுக்களை வாங்குவதும், அதை அப்படியே கிடப்பில் போட்டு வைப்பதும், ஸ்டாலினுக்கு வாடிக்கையாகி விட்டது. தி .மு.க.,வினர் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு கொடுக்க மனம் வராது. அதே நேரம், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மக்களுக்கு கொடுத்துக் கொடுத்து வாழ்ந்தனர். ஏழைகள் வாழ உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க., தி.மு.க., அப்படி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் சேர்மனாக இருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் இயக்குனர்களாக இருக்கின்றனர். கட்சியாக இருந்தாலும், ஆட்சியாக இருந்தாலும் ஸ்டாலின் குடும்பத்தினர் தான் பதவியில் இருப்பர். விரைவில் அந்நிலை மாறும். அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். ஆனால், தனிப் பெரும்பான்மை பெற்று, அ.தி.மு.க., தனித்தே ஆட்சி அமைக்கும். தமிழகம் முழுதையும் ஸ்டாலின் குடும்பத்தினர் பட்டா போட்டுக் கொண்டுள்ளனர். ஸ்டாலின் குடும்ப ஆட்சிக்கு, அ.தி.மு.க., சார்பில் விரைவில் முடிவுரை எழுதப்படும். வாரிசு அரசியல், குடும்ப ஆட்சிக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை