பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
புதுக்கோட்டை:கறம்பக்குடி அருகே குடிநீர் வராத பழுதடைந்த போர்வெல் குழாய்க்கு, மாலை அணிவித்து பெண்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கே.கே.பட்டியில், அமைக்கப்பட்டுள்ள, இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆறு மாதங்களுக்கு முன், ஒரு ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதானது. இதை சரி செய்ய அதிகாரிகளிடம் கூறியதற்கு, உரிய தொகை அரசு வழங்கவில்லை என அலட்சியமாக கூறினார். மற்றொரு ஆழ்துளை கிணறு மோட்டாரை வைத்து, இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் தண்ணீர் ஏற்றி, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, 15 நாட்களுக்கும் மேலாக, அந்த ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதானது. அதையும் சரிசெய்யவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கிராம மக்கள் அவதி அடைந்தனர். இதில், ஆத்திரம் அடைந்த கிராமமக்கள், 50-க்கும் மேற்பட்டோர் ஆழ்துளை கிணறு மோட்டார்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, நேற்று பழுதாகி உள்ள ஆழ்துளை கிணறு குழாய்க்கு, மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.