| ADDED : ஆக 23, 2024 03:03 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் புதிய காருக்கு ஆர்.சி., புக் வழங்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான வட்டார போக்குவரத்து அலுவலக டெஸ்பாட்ச் எழுத்தர் சையதுவை போக்குவரத்து கமிஷனர் சஸ்பெண்ட் செய்தார்.கீழக்கரை தட்டான் தோப்புத்தெருவைச் சேர்ந்த நாகபாண்டியன் மகன் ரகு 35. இவர் ஜன., 3ல் தனது மனைவி சுதா பெயரில் புதிய கார் வாங்கினார். காரை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2024 ஜன., 30 பதிவு செய்தார். ஆர்.சி., புக் வழங்காமல் அலுவலர்கள் இழுத்தடித்தனர்.ரகு ஆர்.டி.ஓ., அலுவலக டெஸ்பாட்ச் எழுத்தர் சையதுவிடம் கேட்டார். புரோக்கர் நசீரிடம் 28, ரூ.2500 லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக ஆர்.சி., புக் கொடுத்துவிடுவார் என சையது தெரிவித்தார். ரகு நசீரை தொடர்பு கொண்டு கேட்ட போது 500 ரூபாய் குறைத்து ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதனால் கார் நிறுவன மேலாளர் முருகேசனிடம் 40, ரகு கேட்ட போது அவரும் ரூ.2000 கொடுத்தால் தான் ஆர்.சி., புக் கிடைக்கும் என்றார்.இதனால் ரகு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து கார் நிறுவன மேலாளர் முருகேசன், நசீர், சையது ஆகியோரை ஜூலை 29 கைது செய்தனர்.இதையடுத்து போக்குவரத்துத்துறை மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் சுன் சோங்கம் ஜடக்சிரு சையதுவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.