உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன் கடைகளில் காலாவதி ரவை, சேமியா விற்பனை

ரேஷன் கடைகளில் காலாவதி ரவை, சேமியா விற்பனை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்ட ரேஷன்கடைகளில் காலாவதியான ரவை, சேமியா பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.ரேஷன்கடைகளில் அரிசி, சீனி, துவரம் பருப்பு, பாமாயில், ரவை, கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது. இம்மாவட்டத்திலுள்ள சில ரேஷன்கடைகளில் விற்பனை தேதி முடிந்த நிலையில் காலாவதியான மளிகைப்பொருட்கள் சில நாட்களாக விற்கப்படுகின்றன. திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன்கடைகளில் 39 ஆயிரத்து 400 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான கடைகளில் சில நாட்களாக காலாவதியான ரவை மற்றும் சேமியா பாக்கெட் விநியோகிக்கப்படுவதாக நுகர்வோர் அதிருப்தி தெரிவித்தனர்.எட்டுகுடியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இங்குள்ள ரேஷன்கடையில் ஜூன் 26 தேதியுடன் காலாவதியான ரவை, சேமியா பாக்கெட் வழங்கப்பட்டது. வீட்டிற்கு சென்று பாக்கெட்டுகளை பிரித்த போது அதில் வண்டுகள் இருந்தன. இதை சாப்பிட்டால் வயிறு கோளாறு, குடல் புண் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான உணவுப்பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.இதுகுறித்து திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறியதாவது: காலாவதி ரவை, சேமியா பாக்கெட் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இப்பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரேஷன்கடைகளில் வழங்கப்படுகின்றன. விற்பனையாளர்கள் கவனிக்காமல் வாங்கியிருக்கலாம். கடைகளில் ஆய்வு செய்து காலாவதி பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !