| ADDED : ஆக 07, 2024 07:48 AM
ராமேஸ்வரம் : -தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:உண்மையான மீனவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள நிலையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை டில்லிக்கு யாரை அழைத்துச் சென்று வெளியுறவு அமைச்சரை சந்திக்க வைத்து ஏமாற்றுகிறார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் டில்லிக்கு செல்கிறார்.இந்த நாடகம் நீடிக்காது. மக்கள் நம்பமாட்டார்கள். 1974ல் காங்., தி.மு.க., கூட்டணி கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த நாள் முதல் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிபோனது. கச்சத்தீவை மீட்போம் என ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு. முதல்வர் ஸ்டாலினை நம்பிதானே மக்கள் 39 தொகுதியிலும் வெற்றி பெறச் செய்தார்கள். அவர்களை பாதுகாக்காமல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்களே. குஜராத், கேரளா மீனவர்கள் பாதித்தால் மத்திய அரசும், மாநில அரசும் துடிக்கிறது. இங்கு ஸ்டாலின் அதனை பொருட்படுத்தாமல் மகனை துணை முதல்வர் ஆக்குவதில் குறியாக உள்ளார்.பத்து ஆண்டு ஆட்சியில் இருந்த பா.ஜ., அரசு கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் நேரத்தில் வதந்தி பரப்பினர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம், மின்கட்டணம் உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்பாரா என கேட்டால், இதெல்லாம் சகஜம் என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். மீனவர்களையும், மக்களையும் பாதுகாக்கத் தவறிய ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.மீண்டும் பழனிசாமி முதல்வராகி மக்களை பாதுகாப்பார். இது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. மத்திய, மாநில அரசின் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.அ.தி.மு.க., ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், அன்வர்ராஜா, ராமேஸ்வரம் நகர் செயலாளர் கே.கே.அர்ச்சுனன் உட்பட ஏராளமான மீனவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.