10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை வைக்க கூடாது: கலெக்டர் உத்தரவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார்.கலெக்டர் கூறியதாவது: 10அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்து செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வேதிப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்தக் கூடாது. மேலும், பெயிண்ட் பூசிய சிலைகளை கரைக்க கூடாது. போலீசார் அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைத்து வழிபடட வேண்டும். பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் இரண்டு தன்னார்வலர் களை நியமிக்க வேண்டும். பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் அருகில் சிலை நிறுவப்படுவது தவிர்க்க வேண்டும். என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்கலெக்டர் அபிலாஷா கவுர், கூடுதல் எஸ்.பி., காந்தி உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.