பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து கண்டன தீர்மானம்
சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.கீரந்தையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது.மாநில பொதுச் செயலாளர் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். வி.ஏ.ஓ., சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சேகர் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வன் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்தும், வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு பட்டப்படிப்பை தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்களின் வாரிசுகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். பரமக்குடி, திருவாடனை, கமுதி, ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து தாலுகாக்களிலும் இருந்து ஏராளமான வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.--