அடிப்படை வசதிக்கு ஏங்கும் பேய்க்குளம் கிராம மக்கள் ஆய்வுக்கு வாங்க ஆபிசர்
சிக்கல் : சிக்கல் அருகே பேய்க்குளம் ஊராட்சிக்குட்பட்ட மேற்கு பகுதி பேய்க்குளத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு உள்ள கிராம மக்கள் அன்றாடம் பயன்படுத்த தண்ணீர் மற்றும் குடிநீரை சேகரிப்பதற்காக 3 கி.மீ., தொலைவில் உள்ள பேய்க்குளம் கண்மாயில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுவரை சாலை அமைக்காத காரணத்தால் மண் பாதையாகவே உள்ளது. பேய்க்குளம் மேற்கு விவசாயி பிச்சைக்கனி கூறியதாவது: அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றிய குழு கூட்டத்திலோ கூறி அதற்கான நிவாரணம் பெறாமல் பல வருடங்களாக உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.ஓ., பிளான்ட் ரூ. 10 லட்சத்தில் அமைக்கப்பட்டது. எவ்வித பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாகவே உள்ளது.பள்ளி மாணவர்கள் அருகேயுள்ள கிராமத்திற்கு செல்வதற்கு சாலை இல்லாததால் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் எங்கள் கிராமத்தை பார்வையிட்டு சுதந்திரம் அடைந்த காலம் முதல் எவ்வித வசதியும் இல்லாத நிலையை போக்கி குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்றார்.