வீணாகும் வணிக வளாகம் கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம் என்னாச்சு...
பரமக்குடி: பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாக கட்டடத்தில் கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 2006ம் ஆண்டு பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.18.50 லட்சத்தில் வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டது.கிராமப்புற சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழுக்களின் திறன் மேம்பாட்டுக்கும் பல்வேறு திட்டங்கள் உள்ளன.இதன்படி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 2006ம் ஆண்டு கட்டடம் கட்டப்பட்டது. அங்கு பல்வேறு சுய உதவி குழுவினர் தொழில்களை துவக்கி நடத்தினர்.தொடர்ந்து இந்த வணிக வளாகம் செயல்பாடின்றி கட்டடம் வீணாகி உள்ளது.இங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி போன்ற பின் தங்கிய பகுதிகளில் இது போன்ற தொழில் வாய்ப்பை உருவாக்கும் வளாகங்களையும் மீட்டெடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும், என சுய உதவிக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.