பார்த்திபனுார் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்படுமா: இடமின்றி பயணிகள் அவதி
பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் பஸ் ஸ்டாண்ட் குறுகிய அளவில் உள்ளதால் பயணிகள் சிரமப்படுவதால் பஸ்ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பரமக்குடியில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் பார்த்திபனுார் உள்ளது. பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனுார் சிறிய கிராமமாக இருந்தாலும் பரமக்குடி, மானாமதுரை மற்றும் கமுதி ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் மையமாக உள்ளது. இதனால் மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளடக்கி இருக்கிறது. பார்த்திபனுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து சேவை உள்ளது.இந்நிலையில் பார்த்திபனுார் பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய அளவில் சிறிய பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிற்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பஸ்களின் எண்ணிக்கை அடிப்படையில் தினம் பல நுாறு பயணிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது.மேலும் பஸ் ஸ்டாப் கூரையில் ஒட்டு மொத்தமாக மரங்களின் இலைகள் மற்றும் கிளைகள் பரவி மழைநீர் தேங்குகிறது. இதனால் கூரை ஆபத்தான நிலையில் இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதால் மேலும் நெரிசல் ஏற்படுகிறது.எனவே எளிதான போக்குவரத்தை கருத்தில் கொண்டும், விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும் பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.