வேன்-கார் மோதல் 14 பேர் காயம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன்- கார் மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சீனிவாசன், உறவினர்கள் 20 பேர் நேற்று காலை ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம்செய்தனர். பின் இவர்கள் வேனில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா சென்று திரும்பினர். வேனை ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியை சேர்ந்த நந்தகுமார் 25, ஓட்டினார். இவர்கள் தனுஷ்கோடியை கடந்து வந்த போது எதிரில் வந்த பெங்களூரு சுற்றுலாப் பயணிகளின் கார் எதிர்பாராமல் வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் கவிழ்ந்தது. காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. வேனில் இருந்த சீனிவாசன் 45, யுவராஜ் 34, பவானி 30, நித்தீஸ்வரன் 5, ஆனந்தி 47, லாவண்யா 26, தட்சிணாமூர்த்தி 61, ராணி 50, ராமலிங்கம் 60, மற்றும் காரில் இருந்த டிரைவர் சந்திரசேகர் 34, அமிர்தம் 54, மன்மதன் 60, காயத்ரி 28, கிருஷ்ணவேணி 25, ஆகிய 14 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தனுஷ்கோடி போலீசார் விசாரிக்கின்றனர்.