உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாயாகுளத்தில் 17 மின் மோட்டார்கள் பறிமுதல் தினமலர் செய்தி எதிரொலி

மாயாகுளத்தில் 17 மின் மோட்டார்கள் பறிமுதல் தினமலர் செய்தி எதிரொலி

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் சட்டவிரோதமாக அதிக உறிஞ்சும் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தண்ணீர் கிடைக்கும், இதர பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் பெரும் சிக்கல் நீடித்து வந்தது. ஜல் ஜீவன் திட்டத்தின் நோக்கத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சும் செயல் அரங்கேறி வந்தது. இது குறித்து கடந்த வாரம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று திருப்புல்லாணி யூனியன் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாயாகுளம் பகுதிகளில் வீடுகள் தோறும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்புகளில் பொருத்தப்பட்ட அதிக உறிஞ்சும் திறன் கொண்ட 17 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஊழியர்கள் இது போன்ற நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்கை கையாளுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதேபோன்று புது மாயாகுளம் பகுதிகளில் வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி உறிஞ்சிகின்றனர். இது போன்ற சட்ட விரோத நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை