உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 30 கிராமங்கள் துண்டிப்பு

30 கிராமங்கள் துண்டிப்பு

திருவடாானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் பெய்த கனமழையால் தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 30 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானையில் தொடர் மழையால் விருசுழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குருந்தங்குடியிலிருந்து கடம்பூர் வழியாக கண்ணங்குடி செல்லும் தரைப்பாலத்தில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவகோட்டையில் இருந்து கண்ணங்குடி வழியாக நீர்க்குன்றம் செல்லும் டவுன்பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் கடம்பூர், மாணிக்கம்கோட்டை, குருந்தங்குடி, விசும்பூர், கண்ணங்குடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் திருவாடானைக்கு செல்ல 20 கி.மீ., தேவகோட்டை சென்று அங்கிருந்து திருவாடானைக்கு செல்கின்றனர்.இதே போல் தோமாயாபுரம்-பாகனுார் தரைபாலத்திற்கு மேல் வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. விருசுழி ஆற்றில் விசும்பூர் அருகே கட்டப்பட்ட அணைக்கட்டுக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றின் ஓரத்தில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஓரியூரில் இருந்து திருப்புனவாசல் செல்லும் தரைபாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இதற்காக மாற்று சாலை அமைக்கப்பட்டது. கனமழையால் மாற்று சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 கி.மீ., எஸ்.பி.பட்டினம் சென்று அங்கிருந்து திருப்புனவாசல் செல்கின்றனர். போக்குவரத்து பாதிப்பால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !