உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோழி குஞ்சுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மூங்கில் பஞ்சாரம்

கோழி குஞ்சுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மூங்கில் பஞ்சாரம்

திருவாடானை: திருவாடானை பகுதியில் நாட்டுக்கோழி குஞ்சுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மூங்கில் பஞ்சாரம் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.திருவாடானை, தொண்டி பகுதியில் இறைச்சி, முட்டைக்காக நாட்டுக்கோழிகள் வளர்ப்பது கிராமங்களில் அதிகமாக நடக்கிறது. திருவிழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகளின் போது இறைச்சிக்காக தங்களுக்கு தேவையான கோழிகளை, வீடுகளில் கிராம மக்கள் வளர்க்கின்றனர். கோழிக் குஞ்சுகளை பாதுகாக்க பயன்படுவதே இந்த பஞ்சாரம். அடிப்பாகம் நான்கு அடி அகலத்தில் வட்ட வடிவமாகவும், மேல்பாகம் ஒரு அடி வட்ட வடிவத்தில் குறுகலாகவும், அதிகப்பட்சம் மூன்று அடி உயரத்தில் கூண்டு போல் மூங்கில்களால் அமைக்கபட்டிருக்கும். ஒரு பஞ்சாரத்தில் அதிகப்பட்சமாக 20க்கும் மேற்பட்ட குஞ்சுகள் அடைக்கப்படும். கடந்த 30 ஆண்டுகளில் பழம்பெரும் தொழில்கள் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி சென்று கொண்டுஉள்ளன. அந்த வகையில் கூடைத் தொழிலும் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது. வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில் தங்கியிருந்து மூங்கிலால் செய்யப்பட்ட கோழி அடைக்கும் பஞ்சாரக் கூடை, சாதம் வடிக்கும் கூடை என பல வகையிலான மூங்கில் பொருள்களை தங்களது கைவண்ணத்தில் உருவாக்கி வருகின்றனர்.இப்போது அனைத்தும் பிளாஸ்டிக் மயமானதால் மூங்கில் கூடை, சீசன் தொழிலாகவே நடந்து வருவதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர். அதாவது திருமண சீசன்களில் சாதம் வடிக்கும் கூடைகள்விற்பனையாகின்றன. கோழி பஞ்சாரக் கூடைகளோ பெயரளவில் தான் விற்பனையாகிறது.இவ்வாறு அழிவின் விளிம்பில் உள்ள இது போன்ற தொழில்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ