உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதார் சேவை மையத்தில் மக்கள் கூட்டம்; கூடுதலான எண்ணிக்கை இல்லாததால் அவலம்

ஆதார் சேவை மையத்தில் மக்கள் கூட்டம்; கூடுதலான எண்ணிக்கை இல்லாததால் அவலம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் மக்கள் அலைகழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுகிறது.அரசு நலத்திட்ட உதவிகள், வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாகும். அரசு தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என அனைத்து நிலையிலும் ஆதார் எண் அவசியமாகிறது. ஆதார் எண் இருப்பதால் ஆள்மாறாட்டம் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைகிறது. ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, அலைபேசி எண் உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கும் ஆதாரை புதுப்பிப்பதற்கும் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். புதிதாக ஆதார் எடுப்பதற்கும், ஆதார் திருத்தங்களை செய்வதற்கும் தொலைதுார கிராமங்களை சேர்ந்தவர்கள் அதிகாலையிலே ஆதார் சேவை மையங்களுக்கு வந்து விடுகின்றனர். ஆதார் சேவையை அனைத்து மக்களும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ