பாம்பன் பாலத்தில் இருள் அதிகாரிகள் குழு ஆய்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே இருள் சூழ்ந்த பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பழுதான மின் விளக்குகளை தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பாம்பன் கடலில் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988 முதல் ராமேஸ்வரத்திற்கு வாகன போக்குவரத்து ஏற்படுத்தியது. இப்பாலத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரித்து வந்து நிலையில் 2022ல் மின் விளக்குகள், தடுப்பு சுவர்கள், துாண்களை புதுப்பித்தனர்.கடந்த சில மாதங்களாக பாலத்தின் இருபுறமும் உள்ள 210 மின் விளக்குகளும் எரியாமல் இருளில் மூழ்கியது. இதனால் பாலத்தில் வாகன விபத்து ஏற்பட்டு மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது குறித்து செப்.27ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பழுதான மின் விளக்குகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். மேலும் சோலார் மூலம் மின் விளக்குகளை ஒளிரச் செய்வது குறித்தும் ஆலோசனை செய்தனர்.