பரமக்குடி வைகையில் ஆயிரம் பொன் சப்பரம்
ஆற்றில் கூடி இழுக்கும் மக்கள்
பரமக்குடி சித்திரைத் திருவிழாவில் முத்தாய்ப்பாக வைகை ஆற்றில் மக்கள் ஒன்று கூடி ஆயிரம் பொன் சப்பரத்தை இழுக்கும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னோட்டமாக வைத்து பரமக்குடியில் கொண்டாடப் படுகிறது. இதன் ஒரு அங்கமாக மக்கள் ஊர் கூடி தேர் இழுக்கும் பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் பல நூறு ஆண்டுகளாக சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் ஆயிரம் பொன் சப்பரம் விளங்குகிறது.இதன்படி கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பின் ஆற்றுப்பாலம் பகுதியில் ஜோடிக்கப்பட்ட ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுவார். இது நான்கு உயரமான சக்கரங்களுடன், முதல் 30 அடி சுற்றளவு மற்றும் 40 அடி உயரம் கொண்ட உச்சி கோபுரம் வரை தனித்தனியாக ஜோடித்துக் கட்டப்படுகிறது.இந்தச் சப்பரத்தை பக்தர்கள் இரவில் வைகை ஆற்று மணலில் காக்கா தோப்பு வரை உள்ள 3 கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்கின்றனர். இது பரமக்குடிக்கு ஒரு சிறப்பான மகிமையை ஏற்படுத்துகிறது. மேலும் தேரின் வடம் 50 அடி நீளம் வரை நான்கு இடங்களில் கட்டப்பட்டிருக்கும். 300 பேருக்கு மேலான பக்தர்கள் இந்த தேரை இழுத்தால் மட்டுமே நிலையை அடைய முடியும். தொடர்ந்து இந்த பிரம்மாண்ட சப்பரம் ஒவ்வொரு ஆண்டும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்டியூரை நோக்கி இழுத்துச் செல்லப்படுவது சிறப்பாகும்.