ராமநாதபுரத்தில் 49 பிளாக் ஸ்பாட் டுகள் விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 49 இடங்கள் பிளாக் ஸ்பாட்டாக கண்டறியப்பட்டு விபத்துக்களை தடுக்க பரிந்துரைகளை அதிகாரிகள் போக்குவரத்துத்துறை ஆணையருக்கு அளித்துள்ளனர்.தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கும் சாலைகளை தேர்வு செய்து அதில் அதிக விபத்துக்கள் நடந்த இடங்களை கண்டறிந்து பிளாக் ஸ்பாட்டுகளில் என்ன மேம்பாட்டு பணிகள் செய்தால் விபத்துக்களை தடுக்கலாம் என நெடுஞ்சாலை, போக்குவரத்து, போலீஸ் துறையினர் இணைந்து ஆய்வு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் விபத்துக்களை தடுக்க ஆண்டு தோறும் நுாறு சாலைகளை தேர்வு செய்து அதில் உள்ள பிளாக் ஸ்பாட்டுகள் கண்டறியப்படுகிறது. ராமநாதபுரத்தில் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பார்த்திபனுார் மருச்சுக்கட்டி வரையும், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ராமேஸ்வரம் வரையும், ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து கன்னிராஜபுரம் வரை என 3 சாலைகள் தேர்வு செய்யப்பட்டன.இங்கு ஏற்பட்ட விபத்துக்களின் 5 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தால் அந்தப்பகுதியை பிளாக் ஸ்பாட் ஆக தேர்வு செய்கின்றனர். இதில் 2023 ல் 115 வாகன விபத்துக்களில் 39 உயிரிழப்பு நடந்துள்ளன. 77 வாகன விபத்துக்களில் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 2024ல் 114 விபத்துக்களில் 41 உயிரிழப்புகள், 73 விபத்துகளில் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.2025ல் இது வரை 29 விபத்துக்களில் 5 உயிரிழப்புகள், 24 விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் இந்த மூன்று சாலைகளில் இருந்தும் 49 பிளாக் ஸ்பாட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் விபத்துக்கள் நடக்கமால் இருக்க எச்சரிக்கை பலகைகள் அமைத்தல், ஒளிரும் விளக்குகள் அமைத்தல், பேரிகார்டுகள், சிக்னல்கள் அமைத்தல் போன்றவைகளை செய்ய போக்குவரத்து ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதனடிப்படையில் சாலை பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஆய்வில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், சந்தீஷ் எஸ்.பி., வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து 49 பிளாக் ஸ்பாட்டுகள் குறித்த அறிக்கை தயாரித்து போக்குவரத்துத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.