கடலில் லைட் வெளிச்சத்தில் மீன்பிடித்தால் நடவடிக்கை உதவி இயக்குநர் எச்சரிக்கை
தொண்டி: கடலில் லைட் வெளிச்சத்தில் மீன் பிடித்தால் படகு உரிமையாளர்கள் மீது கடல் சார் ஒழுங்குமுறை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மீன்வளதுறை உதவி இயக்குநர் கோபிநாத் எச்சரித்தார். அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டம்ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரையிலான மீனவ கிராமங்களில் சில மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒளித்திறன் கொண்ட மின் விளக்குகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்யும் மற்ற மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அடிக்கடி மீனவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒளித்திறன் கொண்ட மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது சட்டபடி குற்றம். எனவே தடை செய்யப்பட்ட மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனை மீறும் மீனவர்கள், படகு உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கடல் சார் மீன்பிடித்தல் ஒழுங்குமுறைபடுத்தும் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.