பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
ராமநாதபுரம், : தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.ராமநாதபுரம் ஈதுகா கோரி தோப்பு மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது உலக அமைதிக்காகவும், மழைக்காகவும் பிரார்த்தனை நடந்தது.தொழுகை நிறைவு பெற்றவுடன் ஒருவரை, ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதுபோன்று ராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகைகள் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் லேத்தஸ் பங்களா ரோட்டில் உள்ள ஹாஜியாரப்பா ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.கீழக்கரை: கீழக்கரை வடக்கு தெரு, கிழக்குத் தெரு, தெற்கு தெரு, நடுத்தெரு, மேலத்தெரு, உள்ளிட்ட எட்டு ஜமாத்துகளில் உள்ள பள்ளிவாசல்கள், மைதானம், திடல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. பெரியபட்டினம், தினைக்குளம், திருப்புல்லாணி, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, கடலாடி, ஒப்பிலான், மாரியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. மாலையில் கடற்கரை, பொழுதுபோக்கு சுற்றுலா இடங்களுக்கு சென்று பொழுதைக் கழித்தனர்.தொண்டி: பக்ரீத் முன்னிட்டு தொண்டியில் சிறப்பு தொழுகை நடந்தது. மலுங்கு ஒலியுல்லா திடலில் ஏராளமானோர் சென்று தொழுகை நடத்தினர். இதில் இறைவனின் துாதரான இப்ராஹீம் நபியின் தியாகம் குறித்து விளக்கபட்டது. முடிவில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.*ஆர்.எஸ்.மங்கலம்: பெரிய கண்மாய் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. முன்னதாக ஜமாத்தார்கள் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்து தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்.எஸ். மங்கலம் கிளை சார்பில், சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆலிம் அஜிஸ் சிறப்பு தொழுகை நடத்தினார். கிளைத் தலைவர் ரியாஸ்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.