தரையில் காயப்போடப்படும் படுக்கை விரிப்புகள் : நோய் தொற்றும் அபாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்திய துணிகளை சுகாதாரத்துடன் கையாளாததால் நோயாளிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கை வசதி உள்ளது. இதில் நுாறுக்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுவோரின் படுக்கை விரிப்புகளை தினமும் மாற்ற வேண்டும். விரிப்புகள் துாய்மையாக இருப்பதையும், தினமும் மாற்றுவதையும் அடையாளம் காண்பதற்காக ஒவ்வோரு நாளும் வெவ்வேறு நிறங்களில் விரிப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்திய விரிப்புகளை துவைப்பதற்கு என பிரத்யேக இயந்திரங்களை கொண்டு தனிப்பிரிவு இயங்கி வருகிறது. அதற்கென உள்ள இயந்திரத்தில் 71 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உள்ள கொதிநீரில் அரை மணி நேரம் வைக்க வேண்டும். அதன்பின் பாதுகாப்பான முறையில் உலர்த்தி மறு பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை பாதுகாப்பற்ற முறையில் மருத்துவமனை வளாகத்தில் தரையிலும், கைப்பிடி சுவற்றிலும் காய வைத்துள்ளனர். இதனால் தரையில் உள்ள கிருமிகள் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நோயாளிகள் பயன்படுத்திய விரிப்புகளை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.