ராமநாதபுரத்தில் பறவைகள் சரணாலயங்கள்..களையிழந்தது: மழையின்றி நீர்நிலைகளில் தண்ணீர் குறைவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ள நிலையில் மழையின்றி இங்கு நீர்நிலைகள் வறண்டதால் பறவைகள் வருகையின்றி வெறிச்சோடியுள்ளது. மாவட்டத்தில் பல பெரிய குளங்கள், கண்மாய்கள் அமைந்துள்ளன. நுண்ணிய உயிரினங்களும், மீன்களும், ஆமைகளும் வாழ்கின்றன. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது இவை மட்டுமில்லாது நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை தரும் பறவைகளுக்கு புகலிடமாக விளங்குகிறது. இந்த பறவைகள் தங்களுக்கு தேவையான மீன்களையும் மற்ற பிற உயிரினங்களையும் கண்மாயில் இருந்து பிடித்து உணவாக்குகின்றன. இந்த கண்மாய்களில் 1980 ஆண்டு முதல் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நாட்டு கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை நன்றாக வளர்ந்து பறவைகளுக்கு கூடு கட்டுவதற்கு பயன்படுகின்றன. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வன உயிரின காப்பாளரின் கட்டுப்பாட்டில் சித்திரங்குடியில் 47.63 எக்டேரில் உள்ளது. காஞ்சிரங்குளத்தில் முதுகுளத்துார்- கமுதி ரோட்டில் 104.21 எக்டேரிலும், மேலசெல்வனுார், கீழசெல்வனுாரில் கிழக்கு கடற்கரை சாலை சிக்கல்- சாயல்குடி இடையை 593.08 எக்டேரிலும் அமைந்துள்ளது. தேர்ததங்கல் பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம்--நயினார் கோவில் ரோட்டருகே 29.29.5 எக்டேரில் உள்ளது. இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன. குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை ஆகியவை இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம் பெயர்கின்றன. இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் போதுமான மழையின்றி நீர்நிலைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் (அக்.,) சீசன் துவங்க உள்ள நிலையில் பறவைகள் வருகை குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மழை பெய்தால் மட்டுமே வெளியூர்களில் இருந்து பறவைகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.--