உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டு நிறுவனம் துார்வாரிய வரத்து கால்வாய்: மக்கள் மகிழ்ச்சி

தொண்டு நிறுவனம் துார்வாரிய வரத்து கால்வாய்: மக்கள் மகிழ்ச்சி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் ஆப்பநாடு இளைஞர்கள், விவசாயிகள் சபை, மெகா பவுண்டேஷன் சார்பில் 2 கி.மீ., வரத்து கால்வாய் துார்வாரப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கூவர்கூட்டம் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக இருந்தது. கிராமத்தில் உள்ள கண்மாய் பல ஆண்டுகளுக்கு முன்பு துார்வாரப்பட்டது. அதன் பின் முறையாக துார்வாரப்படவில்லை. இதனால் பருவமழை காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைக்காமல் ஏராளமான குடும்பங்கள் பிழைப்புக்காக பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு பிழைப்புக்காக சென்றனர். இப்பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் கூறியதாவது: கூவர்கூட்டம் கிராமத்தில் கண்மாயில் வரத்து கால்வாய் துார்வாரப்படாததால் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் ஏராளமான குடும்பங்கள் வெளி மாவட்டத்திற்கு சென்றனர்.தற்போது இருக்கும் ஒரு சில மக்கள் போர்வெல், டிராக்டர் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை. தற்போது தொண்டு நிறுவனமான ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் சபை, மெகா பவுண்டேஷன் சார்பில் கூவர்கூட்டம் கிராமத்தில் கண்மாய்க்கு வரக்கூடிய வரத்துகால்வாய் 2 கி.மீ., துார்வாரப்பட்டுள்ளது.இதனால் வரும் காலங்களில் கண்மாயில் மழை நீரை தேக்கி வைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களுக்கு உதவிய நிமல் ராகவன், மனோசந்தர் மற்றும் ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் சபை, மெகா பவுண்டேஷன் நிர்வாகிகளுக்கு கிராமம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கண்மாய் ஊருணிகள் துார்வாரப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் செய்யாத உதவியை தனியார் அமைப்புகள் செய்து கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும் கிராமத்தில் தேவையான தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ