ராமநாதபுரத்தில் அக்.3ல் அரசு விழா பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ராமநாதபுரம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் அக்.,3ல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.முந்தைய நாள் (அக்.,2ல்) இரவு கட்சி நிர்வாகிகளை முதல்வர் சந்திக்க உள்ளார். ராமநாதபுரத்தில் நேற்று (செப்.,29) முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ேஷாவும், இன்று (செப்.,30) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து செப்.,28, 29ல் முதல்வர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரம் அருகே பேராவூரில் அக்.,3 காலை 10:30 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்காக முதல் நாள் (அக்.,2ல்) இரவு 7:00 மணிக்கு ஸ்டாலின் ராமநாதபுரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். கரூர் சம்பவம் காரணமாக ராமநாதபுரம் நகரில் நடத்த திட்டமிருந்த ரோடு ேஷா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக விருந்தினர் மாளிகையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், மீனவர்கள், வர்த்தகர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.